கரோன பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் பட்டியலில் கோவையை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 30 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி, கோதுமை மாவு உள்ளிட்டவற்றை ஆட்சியர் கு.ராசாமணி, கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு மண்டல சிறப்பு பணிக் குழு அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று வழங்கினர்.
ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, "கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 141 பேரில், 132 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 9 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் வீடு திரும்புவர். கே.கே.புதூர் பகுதியில் தொடர்ச்சியாக எந்த பாதிப்பும் இல்லாததால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களின் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, மத்திய அரசு, கரோன பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் பட்டியலில் கோவையை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியுள்ளது. எனினும், பச்சை நிறத்தை இலக்காக வைத்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது" என்றார்.
110 பேர் வீடு திரும்பினர்
திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 112 பேரில் 110 பேர் வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 2 பேருக்கு மட்டும் கோவையில் சிகிச்சை தொடர்கிறது. விரைவில் திருப்பூர் மாவட்டம் கரோனா பாதிப்பு பட்டியலில் சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாறும் என்று சுகாதாரத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.