கொடையுள்ளம் கொண்ட 40 பேர் தானமாக வழங்கிய 80 காணி நிலத்தில், 1867 மே 23-ம் தேதி வடலூரில் சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார் வள்ளலார்.
153 ஆண்டுகளுக்கு முன், அவர் தீ மூட்டிய அணையா அடுப்பு, பொதுமக்களின் பங்களிப் புடன் பசியுடன் வருவோருக்கு 3 வேளையும் உணவு வழங்கும் அட்சய பாத்திரமாக விளங்குகிறது. வடலூர் தருமச்சாலையில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோர், உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்டோர் என 600 பேருக்கு நாள்தோறும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.
தற்போது ஊரடங்கால் உணவுக்கு வழி யின்றி அவதியுறும் சிலர் தொலை தூரத்தில் இருந்து நடைபயணமாகவே வடலூர் தருமச்சாலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வருவோரை மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனி முகாம் அமைத்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி தருமச்சாலை நிர்வாகிகள் உணவு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நாள்தோறும் 1,700 முதல் 2,000 பேருக்கு 3 வேளையும் இங்கு உணவு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் கோ.சரவணன் கூறியது:
ஏற்கெனவே தங்கியுள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில் யாருக் கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. இங்கு தங்கியுள்ள அனை வருக்கும் தினமும் காலையில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
இன்னும் ஓராண்டு காலத்துக்கு உணவு வழங்குவதற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்தும் எங்களிடம் இருப்பு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அரிசி இரு மடங்காக வந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் ஒரு லாரி நிறைய காய்கறிகளை அனுப்பியுள்ளார். தானிய நன்கொடைகளைப் பொறுத்தவரை தடையில்லாமல் வந்து சேருகிறது. ஊரடங்கு காரணமாக நிதி நன்கொடை மட்டுமே குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.