‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று சென்னை தாம்பரம் கிழக்குப் பகுதி முகவர் ஆர்.விக்னேஷ் பேசுகிறார்...
பொதுவாக ஆண்டுச் சந்தா வாங்கும் வாசகர்களுடன் எங்களுக்கு அவ்வளவாக அறிமுகம் இருக்காது. ஆனால், தர் சார் அப்படியல்ல. பத்திரிகையை விடுதலின்றி வாசிக்க, முகவர்களுடன் அவ்வப்போது பேச வேண்டும் என்று நினைப்பார். தனது வீட்டுக்கு 3 தமிழ் தினசரிகளை வாங்குகிறார். ‘இந்து தமிழ்’ வாங்குவதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு பேப்பரையும் ஒவ்வொரு காரணத்துக்காக வாங்குகிறேன். இந்து தமிழை வாங்குவது அதன் நடுப்பக்க கட்டுரைகள், இணைப்பிதழ்களுக்காகத்தான்.
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதுபோல இந்த கரோனா காலத்தில் பக்கம் குறைந்திருந்தாலும், தரமான நாளிதழாக வருகிறது. கரோனா விவகாரத்தைக்கூட பீதியை கிளப்பாத வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் அணுகுகிறது. அரசுக்குஆக்கப்பூர்வமான யோசனைகளைத் தருகிறது தலையங்கம்.
அவசியம் பேசியே ஆக வேண்டிய பிரச்சினைகளைப் பேசுகின்றன சிறப்புக் கட்டுரைகள். இந்த விஷயத்தைப் பற்றி இவர் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தால், நினைத்தது மாதிரியே அந்த வாரம் அவர் கட்டுரை எழுதியிருப்பார். அதுதான் இந்து தமிழின் சிறப்பே.
என் மனைவிக்கு ‘பெண் இன்று’ பிடிக்கும் என்றால், மகளுக்கு ‘மாயாபஜார்’, ‘உயிர்மூச்சு’ பிடிக்கும். 3 பத்திரிகைகள் வாங்கினாலும் எங்கள் குடும்பத்தினர் அதிகமாக நேசிக்கும் பத்திரிகைஎன்று இந்து தமிழை சொல்ல லாம்’’ என்றார்.