கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது சென்னை, கோவை, திருப்பூர் தவிர, பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது, மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
நேற்று வரை 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதியைவிட, மாநகராட்சிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியது ஆறுதல் அளித்தாலும், ஊரடங்கை அமல்படுத்தும் பணியிலுள்ள காவல்துறையினர் உள்ளிட்ட அத்தியவாசிய பணியாளர்களுக்கும் இந்த தொற்று பரவ தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெற்குவாசல் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ, திலகர்திடல் போக்குவரத்து காவலர் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் தீயணைப்பு நிலைய வீரர் ஒருவருக்கும் என, சீருடைப் பணியாளர்கள் 3 பேரும் பாதிக்கப்பட்டு மதுரை கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கையொட்டி மதுரை நகருக்கு அயல் பணிக்காக வந்த சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் (தற்போது பேரிடர் மேலாண்மை தடுப்பு பிரிவு) ஒருவருக்கும் இத் தொற்று தொற்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த இவர், சென்னையில் பணிபுரிந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் மதுரை நகருக்கு மாற்றுப் பணியாக வந்தவர். இவருடன் 30-க்கும் மேற்பட்டோர் மதுரை வந்தனர்.
இவர்கள் மதுரை ஆயுதப்படை திருமண மண்டப பகுதியில் தங்கியிருந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது என, சுகாதாரம், காவல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.
இருப்பினும், அவர் தங்கியிருந்த பகுதி, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் இடம் பெறும் நபர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மதுரை நகரில் அடுத்தடுத்து சிறப்பு எஸ்ஐ, 2 காவலர்கள், தீயணைப்பு வீரர் களுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் காவல்துறையினர் அச்சத்தில் உள்ளனர்.
இருந்தாலும் வேறு வழியின்றி உரிய பாதுகாப்புடன் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரிலுள்ள அனைத்து போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கை எழுந்தாலும், அதுவே பிற போலீஸார், அவர்களது குடும்பத்தினர் மத்தியில் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் அதற்கான திட்டம் தற்போதைக்கு இல்லை என, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.