புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாயை பள்ளிகளில் சத்துணவு உடன் சேர்த்து வழங்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் ஆட்டோ தொழிலாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் சங்க ஊழியர்கள் மேளக் கலைஞர்கள் ஆகியோருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
மேலும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் செவ்வாடை பக்தர்களுக்கும், இலுப்பையூரணியில் ஒன்றியக் குழு உறுப்பினர் பூங்கோதை சார்பில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்புவார் தமிழகத்தில் தான் அதிகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களாக புதிதாக எவருக்கும் கரோனா தொற்று அறிகுறி காணப்படவில்லை.
மேலும், கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர்கூட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் சத்துணவு உடன் சேர்க்க தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கோவில்பட்டி கடலைமிட்டாய் தொழில் மேலும் வளர்ச்சியடைய அனைத்து விதமான உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும், என்றார் அவர்.
முன்னதாக கயத்தாறு அருகே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான அய்யனார் ஊத்து ஊராட்சி பகுதி மக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் மணிகண்டன், பாஸ்கரன், வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.