தமிழகம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வேண்டுகோள்

ரெ.ஜாய்சன்

கரோனை வைரஸ் பரவலைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் (விவசாயிகள் அமைப்பு) ஏற்பாட்டில் 250 ஏழை எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கரோனா தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.

காய்கறி சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடித்து, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பெருந்தலைவர் வாழை உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT