தமிழகம்

சிவகங்கையில் 11 நாட்களாக கரோனா தொற்று இல்லை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் நடவடிக்கை- சுகாதாரத்துறை எச்சரிக்கை

இ.ஜெகநாதன்

‘சிவகங்கை மாவட்டத்தில் 11 நாட்களாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்காதநிலையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் என 21 பேர் குணமடைந்தனர். தற்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் , ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக கரோனா தொற்று இல்லை. மேலும் சிகிச்சையில் இருக்கும் ஒருவரும் குணமடைந்து நாளை (மே 2) வீடு திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாற உள்ளது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்போது கரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டை (அ) துணியால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது. மீறினால் பொது சுகாதாரச் சட்டம் 1939-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT