தமிழகம்

கரோனா சிகிச்சையில் மதுரையில் ஒரே ஒரு நோயாளிக்கு மட்டுமே வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது: டீன் சங்குமணி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா சிகிச்சையில் மதுரையில் ஒரே ஒரு நோயாளிக்கு மட்டுமே வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதுவரை ஒரே ஒரு நோயாளிக்கு மட்டுமே வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற நோயாளிகள் அனைவரும் சாதாரணமாக சிகிச்சைப்பெற்று வீடுகளுக்கு திரும்பி வருவதால் இந்த நோய், தமிழகத்தில் எதிர்பார்த்தளவிற்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் மோசமான நோயாக உருவெடுக்கவில்லை.

‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவக்குழுவினர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை முகம் முதல் உள்ளங்கால்வரை பயன்படுத்தக்கூடிய பிபிஇ முழு கவச உடை, முகக்கவசம், கையுறை, கண்களுக்கு பாதுகாப்பு, தலையுறை உள்பட தரமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதாரநிறுவனமும், தேசிய நோய்த் தடுப்பு மையமும் அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையிலே தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள ‘கரோனா’ வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துவப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிகின்றனர். போதுமான பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து இருந்தாலும் ‘கரோனா’ வார்டில் பணிபுரியும் மருத்துவக்குழுவினருக்கும், தூய்மைப்பணியாளர்களுக்கும் ‘கரோனா’ தொற்று ஏற்பட்டு வருகிறது.

ஆனால், இந்தநோய் வெளிநாடுகளை போல் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தாதலால் ‘கரோனா’ வார்டில் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் பணிபுரிந்து வருகின்றனர். நோயாளிகளும் அதிகளவு தமிழகத்தில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 1,258 நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த நோய் பற்றிய பதட்டம் மக்களுக்கு அதிகமாகவே இருந்தது. கரோனா பாதிப்பு முக்கியமாக நுரையீரல் பகுதியைத் தாக்குகிறது என்பதால், நோய் தீவிரம் அடைந்தவர்கள் இயற்கையாகச் சுவாசிக்கச் சிரமப்படுவார்கள் என்றும், இதைத் தடுப்பதற்கு வென்டிலேட்டர்கள் பயன்படுத்தி அவர்களைச் சுவாசிக்க வைத்து, உயிர் பிழைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

அதனால், உலக நாடுகள் வெண்டிலேட்டர் தயாரிப்பிற்கும், அதை விலை கொடுத்து வாங்குவதற்கும் முக்கியத்துவம் கொடுத்தன. தமிழக அரசும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு கூடுதலாக 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் வழங்கியது.

ஆனால், ‘கரோனா’ வார்டுகளில் சிகிச்சையில் பெற்ற பெரும்பான்மை நோயாளிகள் வெண்டிலேட்டர் பயன்படுத்தும் நிலைக்கு மோசமானநிலையை அடையவில்லை. அதனால், தற்போது மற்றநோய்களை போல் சாதாரண மனநிலையிலே சிகிச்சைப்பெற தொடங்கியுள்ளனர்.

ஈரோடு, தூத்துக்குடி என்று ஒன்றின்பின்றாக பல மாவட்டங்கள் முழுமையாக நோயாளிகள் குணமடைந்து நோய் தொற்று இல்லா மாவட்டமாக மாறத்தொடங்கியுள்ளது புது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி கூறுகையில், ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இரு மாவட்டங்களை சேர்ந்த 57 நோயாளிகள் இதுவரை குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதில், மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 42 பேர். மாநகராட்சியை சேர்ந்தவர்கள் 14 பேர் அடங்குவர்.

தமிழகத்தில் முதல் முறையாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட மதுரை அண்ணாநகரை சேர்ந்த கட்டிட ஒப்பந்தாருக்கு மட்டுமே இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே சிஓபிடி என்கிற நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவர் நோய் முற்றிய நிலையிலே வந்ததால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு வெண்டிலேட்டர் பயன்படுத்தினோம். அவர் உயிரிழந்தார். மற்ற யாருக்கும் வெண்டிலேட்டர் பயன்படுத்தவில்லை.அந்தளவுக்கு இந்த நோய் நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சிலர் எந்த தொந்தரவும் இல்லாமல் சிகிச்சைப்பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

சிலருக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு தகுந்தவாறு அந்தந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சையும், மூன்று வேளைகளுக்கும் ஆரோக்கியமான சத்துள்ள உணவுகளும் வழங்குகிறோம்.

அவ்வப்போது நீர் சத்து ஆகாரங்கள் என்று மருத்துவர்களுடைய அக்கறையான சிகிச்சையும், செவிலியர்களின் கனிவான கவனிப்பும் நோயாளிகளை குணமடைய உதவுகிறது. நோயாளிகளும் எந்த மன அழுத்தமும், பதட்டமும் இல்லாமல் சிகிச்சைப்பெற்று செல்கின்றனர்.

மருத்துவர்களுக்கு போதுமான பிபிஇ கிட், முககவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் உள்ளன. 150 வெண்டிலேட்டர்கள் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலையில் வைத்துள்ளோம், ’’ என்றார்.

SCROLL FOR NEXT