சென்னையில் கரோனா தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 2,323 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நேற்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 906 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கரோனா தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 216 பேர் குணமடைந்துள்ளனர். 673 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் வேகமாக பரவும் கரோனாவைக் கட்டுப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணனனை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஆர்ஓ, சுகாதாரத்துறை அதிகாரி, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு தடை செய்யப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ், கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமார் ஐபிஎஸ், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் புஜாரி ஐபிஎஸ், மேற்கு மண்டலத்திற்கு அபய் குமார் சிங் ஐபிஎஸ், சென்னை புறநகருக்கு புவனேஸ்வரி ஐபிஎஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு உறுதுணையாக இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.