தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், 'ஆரோக்கியம்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆரோக்கிய பானம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் 1500 தூய்மை பணியாளர்களுக்கு சூடான ஆரோக்கிய பானம் நேற்று வழங்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் ஆரோக்கிய பானம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். நகர்நல அலுவலர் எஸ்.அருண்குமார் முன்னிலை வகித்தார்.
இஞ்சி, துளசி, மிளகு, அதிமதூரம், மஞ்சள் பவுடர் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இந்த பானம் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு முறை இந்த பானம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.