தமிழகம்

மூன்று மாவட்டங்களைச் சேர்த்து மதுரையில் ஒரு நாளைக்கு 400 பேருக்கு தான் கரோனா பரிசோதனை: சென்னையைப் போல் முக்கியத்துவம் கொடுக்கப்படுமா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் ‘கரோனா’ வைரஸ் சமூக பரவலாகிவிட்டதோ என்ற அச்சம் நிலவும் நிலையில் ஒரு நாளைக்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்த்து 400 பேருக்கு மட்டுமே ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைப்போல் மதுரையில் கூடுதல் பேருக்கு இந்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடைசியாக கடந்த 27-ம் தேதி 4 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 28, 29 ஆகிய நாளாக மாவட்டத்தில் ‘கரோனா’ தொற்று கண்டறியப்படவில்லை.

நேற்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட ‘கரோனா’ உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பட்டியலில் மதுரை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு இந்த நோய் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது. இதில், மாநகராட்சியில் மட்டும் நேற்று ஒரே நாளில் விளாங்குடியில் ஒருவரும், அனுப்பானடியில் ஒருவரும், ரிசர்வ் லைனில் ஒருவரும், கரிசல்குளத்தில் ஒருவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புறநகர் மாவட்டத்தில் சமயநல்லூரில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரையில்தான் ‘கரோனா’ பரவல் வேகம் அதிகமாக உள்ளது. ஆனால், சென்னையை ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் மிக குறைவானவர்களுக்கே ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது.

அதுவும், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்படும் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசாதனை செய்யப்படுகிறது. அறிகுறியிருந்தாலும் மற்றவர்களுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுவது தாமதமாகிறது.

மதுரை மாநகராட்சியில் 24 குடியிருப்புகளுக்கு மாநகராட்சி ‘சீல்’ வைத்துள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள், வீடுகளை விட்டுவெளியேறாமல் போலீஸாரை கொண்டு மாநகராட்சி கண்காணிக்க மட்டுமே செய்கிறது. அவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுவதில்லை.

‘கரோனா’வை பொறுத்தவரையில் அறிகுறியே இல்லாமலும் கண்டறியப்படுகிறது. அதனால், தனிமைப்படுத்தப்பட்ட 24 குடியிருப்புகளில் இருப்பவர்கள் அனைவருக்குமே இந்த நோய் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் ரேபிட் பரிசோதனை வந்தால் வீடு, வீடாக பரிசோதனை செய்யப்படும் என அரசு தெரிவித்தது. ஆனால், அந்த பரிசோதனை குழப்பங்களை ஏற்படுத்தியதால் தற்போது அந்த பரிசோதனை செய்வதை நிறுத்திவிட்டனர்.

முழுக்க முழுக்க அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்த்து மதுரை வெறும் 400 பேருக்கு மட்டுமே இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் இந்த நோய் தெரியாமலே இருந்து அவர்களுக்கு இந்த நோய் பரிசோதனை செய்யப்படாமல் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

சென்னையைப் போல் மதுரையிலும் கூடுதல் நபர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனை செய்வதற்கு அரசு முன் வர வேண்டும். மதுரையில் இந்த நோய் சிகிச்சை மற்றும் தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், போலீஸார், தீயணைப்பு வீரர்களுக்கே இந்த நோய் கண்டறியப்படுகிறது.

அதனால், தற்போது அவர்களுடன் பணிபுரிகிறவர்கள், அவர்கள் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்வதற்கே முக்கியத்துவம் காட்டப்படுகிறது. பொதுமக்களுக்கு அறிகுறியிருந்தால் மட்டுமேபரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நோய் பெரிய உயிரிழப்பு, பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நோய் தொற்று குறையாமல் புதியவர்களுக்கு வந்து கொண்டிருப்பதும், அவர்களுக்கு யார் மூலம் வந்தது என்று கண்டுபிடிக்காமல் இருப்பதும் சமூக பரவல் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகிறது.

தூய்மைப் பணியாளர்களுக்குபாதுகாப்பான முகசவம், கையுறை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அவர்கள்தான் இந்த நோய் தடுப்பு பணியில் முதன்மையானவர்கள், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT