ஊரடங்கால் விவசாயம் முடங்கியுள்ளது. இதையடுத்து, விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துள்ளது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்குத் தடை, மாநில எல்லைகள் மூடல், உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு சென்று விற்க முடியாத சூழ்நிலை, அறுவடை செய்த விளைபொருட்களை சேமித்து வைக்கப் போதிய வசதியின்மை போன்றவை விவசாயத்துக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் வேளாண்மைத்துறை பல்வேறு குழுக்களை அமைத்து விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் கட்டணம் ஏதுமின்றி சேமித்து வைப்பதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், விளைபொருட்களை விவசாயிகளின் இருப்பிடங்களில் இருந்து சந்தைகளுக்குக் கொண்டுச் செல்வதற்கான போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள், ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வருகிறது.
இதுகுறித்து இப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது:
"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 39 ஆராய்ச்சி நிலையங்கள், 14 வேளாண்மை கல்லூரிகள் மற்றும் 14 வேளாண்மை அறிவியல் நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண்மைத்துறையுடன் விவசாயிகளுக்கு பயிர் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னறிவிப்பின் படி, விவசாயிகள் தென்மேற்கு பருவமழையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வேளாண் இடுபொருட்களான விதைகள், நடவு பொருட்கள் மற்றும் உயிர் மூலப்பொருட்களை போதிய அளவில் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்க விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கோடைமழையைப் பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பில் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது"
இவ்வாறு அவர் கூறினார்.