கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் ஹாட்ஸ்பாட் மாவட்டமாக சிவப்பு மண்டலத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் தொற்று குறைந்து வருவதையடுத்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட சில தினங்களிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து 80 ஆனது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தை ‘ஹாட் ஸ்பாட்’ மாவட்டமாக மத்திய அரசு அறிவித்து சிவப்பு மண்டலத்தில் சேர்த்தது. மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து படிப்படியாக வீடுதிரும்ப தொடங்கினர்.
80 பேர் அனுமதிக்கப்பட்டதில் இதுவரை பாதிப்பில் இருந்து மீண்டு 73 பேர் வீடுதிரும்பியுள்ளனர். தற்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துவருவதின் காரணமாக சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு மாற்றியுள்ளது.