தமிழகம்

ஊரடங்கு காலத்தில் முடிவெட்டி உதவும் கோவை வழக்கறிஞர்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், முடிவெட்டிக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுகிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் (43).

ஊரடங்கு உத்தரவால் சலூன்கள் மூடப்பட்டுள்ள நிலை யில், ஏராளமானோர் முடி வெட்டிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மேலும், சலூன்கள் திறக்கப்பட்டாலும், கரோனா பீதியால் சலூன்கடை களுக்குச் செல்ல அஞ்சும் நிலையே உள்ளது.

இந்நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குடியி ருக்கும் வழக்கறிஞர் குண சேகரன், அப்பகுதியினருக்கு இலவசமாக முடிவெட்டி விடுகிறார். அவர் கூறும்போது, "ஒருவருக்கொருவர் சார்ந்து வாழும் சமூகத்தில் வாழ்ந் தாலும், தற்போது சமூக இடை வெளியைக் கடைபிடிக் கிறோம். இந்த இக்கட்டான சூழலில் பல்வேறு தரப் பினரும் வெவ்வேறு வழிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர். என்னால் முடிந்த உதவியை நான் செய்து வருகிறேன். சிறு வயதில் இருந்தே விடுதியில் தங்கிப் படித்ததால், முடிவெட்டிக் கொள்ளவும், மற்றவர்களுக்கு முடிவெட்டிவிடவும் கற்றுக் கொண்டேன்.

கோவை சட்டக் கல்லூரியில் பயின்றபோது விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது நண்பர்களுக்கு நானே கட்டிங், ஷேவிங் செய்துவிடுவேன். அந்தப் பழக்கம் இப்போது எனக்கு உதவுகிறது. எந்தத் தொழிலும் இழிவானதல்ல. பிறருக்கு முடிவெட்டி விடுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. நெருக்கடி காலத்தில் உதவுகிறேன் என்பதே பெரிய மகிழ்ச்சிதான்" என்றார்.

SCROLL FOR NEXT