தமிழகம்

இவர் நம்ம வாசகர்: இவரிடம் யோசனை கேட்பவர்கள் ‘இந்து தமிழ்’தான் வாங்குவார்கள்

செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது.இன்று திருத்தணி பொதட்டூர்பேட்டை முகவர் வி.எல்.உமாபதி பேசுகிறார்...

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் மருந்து கிடங்கு அலுவலராகப் பணிபுரியும் எம்.பழனி சார் நல்ல வாசகர். புதிதாக பத்திரிகை வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு பத்திரிகையை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்று தெளிவாக விளக்குபவர். அவரிடம் யோசனை கேட்டபவர்கள் பெரும்பாலும் ‘இந்து தமிழ்’தான் வாங்குவார்கள்.

“அப்படி என்ன சார் சொன்னீர்கள்?” என்று கேட்டால், “உண்மையைச் சொன்னேன்” என்பார்.“சும்மா சொல்லுங்க சார்” என்றால், “என்னுடைய சொந்த அனுபவத்தைச் சொல்வேன். ஆங்கில ‘இந்து’ தரத்தில் தமிழில் ஒரு நாளிதழ் கிடைக்குமா என்றுகாத்திருந்து வாங்கிய பத்திரிகை‘இந்து தமிழ்’. இதன் சிறப்பு அதன்மொழிநடை. செய்திக்கு, கட்டு ரைக்கு, தலையங்கத்துக்கு, இலக்கியப் பக்கத்துக்கு, இணைப்பிதழ்களுக்கு என்று தனித்தனி மொழி நடையை பயன்படுத்துகிறது.

செய்திக்குள் கருத்தையோ, கற்பனையையோ திணிப்பதில்லை. தலையங்கம் என்றால்ஒரு விஷயத்தை ஞானியைப்போல சிந்தித்து சாமானியனுக்கும் புரியும் நடையில், சார்பில்லாமல் எழுதுகிறார்கள் என்று சொல்லுவேன்” என்பார்.

ஒவ்வொரு முறை பேப்பர்போடும்போதும் அவர் கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறார். “பொன்மொழி, பொதுஅறிவுக்கென்று சிறு பகுதியை ஒதுக்குவதுபோல, வாரத்தில் ஒரு நாளாவது திருக்குறளையும், பரிமேலழகர் உரையையும் பிரசுரிக்கலாமே?” என்று.வாசகர்களின் கருத்தை நிறுவனத்திடம் சொல்ல வேண்டியதும் முகவர்களின் கடமைதானே?

SCROLL FOR NEXT