குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்தையும் அரசே கொண்டு சேர்க்க வேண்டும் என்று சமூகச் செயற்பாட்டாளர் தேவநேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சமூகச் செயற்பாட்டாளரும், குழந்தைகள் நலனுக்காக இயங்கி வரும் தோழமை அமைப்பின் இயக்குநருமான தேவநேயன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''சென்னையில் நோய்த்தொற்று பரவுவதைப் பார்க்கும்போது அச்சமாகத்தான் உள்ளது. இதன் அடிப்படையில் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் (கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில் நகர், நாவலூர், கூடப்பாக்கம், எண்ணூர் சுனாமி காலனி மற்றும் பிற) வசிக்கும் மக்களை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் ஒவ்வொரு வீட்டுக்கும் இடைவெளி அரை அடி கூட இல்லை. வீட்டுக்குள் நீரில்லை, கழிவறை வெளியில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சமூக இடைவிலகல், கை கழுவுதல் என்பது இயலாத சூழல். நோய்த் தொற்று ஏற்பட்டால் நெருப்பை விட வேகமாகப் பரவக்கூடிய சூழல். ஏனெனில் மிகக் குறுகிய இடத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மக்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்ண உணவின்றி, வாழ்வாதாரம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உணவிற்காக, வாழ்வாதாரத்துக்காக வெளியே வரத் தொடங்கினால் மிகவும் ஆபத்தான நிலைதான் ஏற்படும். எனவே தமிழக அரசு இந்த குடியிருப்புப் பகுதிகளில் உடனே தலையிட்டு உணவுப்பொருள் மற்றும் தேவையான அனைத்தையும் வீடுகளிலேயே கொண்டு சேர்க்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் முகக்கவசம் கையுறைகளை உடனே வழங்க வேண்டும். கிருமிநாசினிகள் தொடர்ந்து எல்லாப் பகுதிகளிலும் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மருத்துவ அலுவலர்கள் முழுமையாக பணியில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே சிறப்பு அலுவலர்களை நியமித்து தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உடனே தேவை. அவசியம் அவசரம். வருமுன் காப்பதே விவேகம்''.
இவ்வாறு தேவநேயன் தெரிவித்துள்ளார்.