குணமடைந்து வீடு திரும்பும் பெண்ணுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார். 
தமிழகம்

கரோனா பாதிப்பில்லாத மாவட்டமானது கரூர்; பாதிக்கப்பட்ட கடைசி நபர் வீடு திரும்பினார்

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 42-வது நபர் குணமடைந்து வீடு திரும்பியதால் கரூர் மாவட்டம் கரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக மாறியது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 42-வது நபரான தோகைமலையைச் சேர்ந்த பெண் இன்று (ஏப்.30) குணமடைந்து வீடு திரும்பினார்.

இவரை வழியனுப்பும் விழா, மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், காவல் கண்காணிப்பாளர் ரா.பாண்டியராஜன், கரூர் கோட்டாட்சியர் சந்தியா, கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் தேரணிராஜன், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா தொற்று அறிகுறி மற்றும் தொற்று உள்ளவர்கள் என 300 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 114 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 119 பேருக்கு கரோனா தொற்று இல்லையென்பதால் வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்று உறுதியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 79 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 181 சிகிச்சை பெற்று வந்ததில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 50 பேர் மற்றும் தேனி, திருநெல்வேலி தலா ஒருவர் என 167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் என 14 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்" என்றார்.

SCROLL FOR NEXT