பிரதமர் மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கச் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அரசியல், வணிகம், சமூக சேவை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். இந்திரா காந்தி, சுஷ்மா சுவராஜ், ஆனந்திபென் பட்டேல், வசுந்தரா சிந்தியா, ஸ்மிருதி இரானி, ஜெயலலிதா, பிருந்தா காரத், மாயாவதி, மம்தா பானர்ஜி ஆகியோர் இந்திய அரசியலில் மதிக்கத்தக்க சாதனைகளை செய்துள்ளனர்.
பெண்களை மதிப்பது இந்திய கலாச்சாரமாகும். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பதோடு அதிக வாய்ப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி – முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் – முதல்வர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இளங்கோவன் தனி மனித தாக்குதல் நடத்தியிருப்பதோடு, பெண்களையும், நாட்டையும் அவமதித்துள்ளார். எனவே, கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் மீது நீங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு அவரை வலியுறுத்த வேண்டும் என தமிழிசை வேண்டுகோள்விடுத்துள்ளார்.