தமிழகம்

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழுவினர் ஆலோசனை 

செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் முதல்வரால் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் முதல்வரால் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று (30.04.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் ராஜேஷ் குமார், கார்த்திகேயன், ஆபாஷ்குமார், கா.பாஸ்கரன் ஆகிய அலுவலர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்பொழுது மண்டலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகளை களத்தில் ஒருங்கிணைத்து துரிதமாகச் செயல்படுத்த ஏதுவாக கூடுதலாக கீழ்க்காணும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், இந்தியக் காவல் பணி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் முதல்வர் உத்தரவின்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அலுவலர்களுடன் நடைபெற்ற இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள், தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், கரோனா தொடர்பான பாதுகாப்பு வரன்முறைகளைச் செயல்படுத்துதல், மருத்துவமனைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டுவரும் பல்வேறு அலுவலகங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், கரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியும் சோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடனான தொடர்புகளைக் கண்டறிதல் போன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்துதல் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் சென்னை மண்டல சிறப்புக் குழு அலுவலர்கள் ராஜேஷ் குமார், கார்த்திகேயன், ஆபாஷ்குமார், காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், சிறப்பு குழு அலுவலர் பாஸ்கரன், காவல் கூடுதல் ஆணையாளர்கள் எச்.எம்.ஜெயராம், ஆர்.தினகரன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, மற்றும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், இந்தியக் காவல் பணி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT