தமிழகம்

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு கரோனா; சென்னையில் 138 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆனது 

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 161 பேருக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 90 சதவீதத்துக்கும் மேல் அதாவது 138 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 768 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.

சென்னையில் என்ன முயன்றும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார். இன்று 19 மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டி அளித்த மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர் ஊரடங்கை முழுமையாகத் தளர்வு செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்த முடியும், எதையும் அரசே முடிவெடுத்து அறிவிக்கும், நீண்ட காலமாக இந்த வைரஸ் நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையையும் நாம் மாற்றி அமைத்தாக வேண்டும் என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கரோனா உறுதிப்படுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 161 ஆகும். அதைச் சேர்த்து 2,323 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 138 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 10 மாவட்டங்களில் 23 பேருக்கு தொற்று உள்ளது. 26 மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று இல்லாமல் உள்ளது.

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் பலனளிக்காத நிலையில் பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது. சாதாரணமாக தினமும் 200 பிசிஆர் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரத்தை நோக்கி சோதனை நடத்தும் அளவுக்கு தமிழகம் முன்னேறியுள்ளது. தற்போது 34 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 45 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழ்நாட்டில் நேற்று வரை எடுக்கப்பட்ட மொத்த சோதனை 1,19,748.

* சோதனையில் தொற்று இல்லாதவர்கள் எண்ணிக்கை 1,15,761.

* தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 2,323.

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 1,035 பேர்.

* தற்போது தனிமையில் இருப்பவர்கள் 31 ஆயிரத்து 375 பேர்.

* அரசின் கண்காணிப்பில் இருப்பவர்கள் 40 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,19,748.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 1,10,718.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 9,787.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 161.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 97 பேர். பெண்கள் 64 பேர்.

* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,323.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 48 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,258 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் உயிரிழப்பு எதுவும் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 768 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெரு நகரங்களில் சென்னை 1,000 என்ற தொற்று எண்ணிக்கையை நோக்கி வேகமாகச் செல்கிறது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அதே எண்ணிக்கையில் 141 ஆக உள்ளது. திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70 என்கிற அதே எண்ணிக்கையுடன் உள்ளது. புதிதாக சென்னையில் 138, திருவள்ளூரில் 1, அரியலூர் 1, கடலூர் 1, பெரம்பலூர் 2, மதுரை 5, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 1, சேலம் 1, காஞ்சிபுரத்தில் 3, செங்கல்பட்டில் 5 என மொத்தம் 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 142 பேர். இதில் ஆண் குழந்தைகள் 75 பேர். பெண் குழந்தைகள் 67 பேர்.

13 முதல் 60 வயது உள்ளவர்கள் 1,929 பேர். இதில் ஆண்கள் 1,303 பேர். பெண்கள் 626 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 252 பேர். இதில் ஆண்கள் 175 பேர். பெண்கள் 77 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 26.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 10.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT