நாளை முதல் விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு 3-ம் தேதி முதல் கடலூர் மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ''விவசாயிகள் நலன் கருதி விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்பட உள்ளது. எனினும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும். ஒரே நாளில் அதிக விவசாயிகள் கூடுவதைத் தவிர்க்க தினமும் 150 லாட்டுகள் மட்டுமே வழங்கப்படும். மற்றவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வாய்ப்பு வழங்கப்படும்.
விவசாயிகள் இரவு நேரங்களில் விளைபொருட்கள் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் காலை 5 மணி முதல் முதல் மாலை 6 மணி வரை கமிட்டி திறக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை உட்பட விடுமுறை தினங்களிலும் கமிட்டி செயல்படும். முன் பதிவு பெறாத விவசாயிகளை உள்ளே அனுமதிக்க இயலாது.
லாட் முன்பதிவிற்கு விருத்தாசலம் வேளாண்மை அலுவலர் ராதாகிருஷ்ணனை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 63816 73995, 94870 73705 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தனிமனித விலகலைக் கடைப்பிடித்து கரோனா நோய்ப் பரவலைத் தவிர்க்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டால் வேளாண்மை அலுவலர் ஆறுமுகத்தை 99421 65331, 70108 11207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.