தமிழகம்

குமரி மாவட்ட முதியவருக்கு நேரத்திற்கு நேரம் மாறிய கரோனா அறிகுறி முடிவு: இரு மாநில சுகாதாரத்துறை குழப்பம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மார்த்தாண்டம் முதியவருக்கு கரோனா அறிகுறி இருப்பதாக நேரத்திற்கு நேரம் மாறிய முடிவுகளால் இரு மாநில சுகாதாரத்துறையினர் குழப்பம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக குமரி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

15 நாட்களுக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாததால் அரசு, மற்றும் சுகாதாரத்துறையினர் ஆறுதல் அடைந்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேல்பாலை பகுதியில் மாங்காலை கிராமத்தை சேர்ந்த 68 வயது முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று இரவு சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடல்நல குறைவால் கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சளி, இருமல் இருந்ததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறையினர், தமிழக அரசுக்கு தெரிவித்தனர்.

இதனால் குமரி மாவட்ட நிர்வாகம், மற்றும் சுகாதாரத்துறையினர் இரவோடு இரவாக கரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட முதியவரின் வீடு உள்ள மாங்காலை கிராமத்திற்கு சென்றனர். அங்கு அவரது மனைவி, மகள், இரு மகன்கள், மருமகள், பேரன், பேத்திகளை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அவர்கள் அனைவரின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அவற்றை நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபோது முதியவரின் உறவினர்கள் யாருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்ட முதியவருக்கு நேற்று மீண்டும் கேரள சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா இல்லை என்பது தெரியவந்தது. இந்த முரண்பட்ட வெவ்வேறு முடிவுகளால் தமிழக, கேரள சுகாதாரத்துறையினர் பெரும் குழப்பத்திற்குள்ளாகினர்.

இதுகுறித்து கன்னியாகுமரி சுகாதாரத்துறையினர் கூறுகையில் மார்த்தாண்டம் மாங்காலையை சேர்ந்த முதியவர் கேரள முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது முதலில் நடந்த சோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கேரள சுகாதாரத்துறையினர் எங்களுக்குத் தெரிவித்தனர்.

இதனால் மார்த்தாண்டம், மற்றும் எல்லை பகுதியில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியதுடன், உறவினர்களையும் பரிசோதித்தோம்.

இந்நிலையில் முதியவருக்கு 2-வது எடுக்கப்பட்ட சோதனையில் கரோனா இல்லை என்பதை எங்களிடம் கூறினர்.

இது எவ்வாறு நிகழ்ந்ததென்று தெரியவில்லை. ரேபிட் கிட் மூலம் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ள நிலையில் அவை பயன்படுத்தியதால் இந்த குழப்பம் நிகழ்ந்ததா? என்பதையும் உறுதிபடுத்த முடியவில்லை என்றார்.

SCROLL FOR NEXT