ஊரடங்கு சமயத்தில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வரும் சூழலில், கள்ளக்குறிச்சியில் இத்தகைய வன்முறைக்குள்ளாகும் பெண்கள் அருகிலுள்ள அங்கன்வாடி பணியாளரை தொடர்பு கொண்டு உரிய உதவி மற்றும் ஆலோசனைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதால்,அத்தகைய வன்முறைகளை தணிக்கும் வகையிலும், பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் உதவி வழங்கும் வகையில், அங்கன்வாடிப் பணியாளர்களை தற்காலிகமாக ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட சமூக நலத்துறை செயலாளர் அறிவுருத்தியுள்ளார்.
எனவே பாதிப்புக்குள்ளாகும் பெண்கள், அருகிலுள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், அவர்களுடைய தொடர்பு எண்கள், www.icds.tn.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் அறிந்து புகார் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.