தமிழகம்

உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வா?- புள்ளிவிவரமின்றி பேசும் எதிர்க்கட்சித் தலைவர்- ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி

என்.சன்னாசி

"காய்கறி, உணவுப்பொருட்கள் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. புள்ளி விவரங்கள் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். நம்பிக்கையின்மையால் மக்களை சந்திக்க முடியாமல் அவரது கட்சியினருடன் பேசி, செய்திகளை முழுமையாகத் தெரியாமல் பரப்புகிறார்" என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார்.

தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் டிஜி.வினய், ஆணையர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன்பின், செய்தியாளர்கள் அமைச்சர் கூறியது:

தமிழகத்தில் கரோனா தடுப்புக்கான நடவடிக்கைகள், அறிவுரைகளைத் தொடர்ந்து வழங்கி, பிற மாநிலங்களைவிட முன்மாதிரியாக முதல்வர் செயல்படுகிறார்.

முழு ஊரடங்கு முடிந்ததால் அடுத்தடுத்த நாளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க, உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசரமின்றி சமூக விலகல் போன்ற விதிகளைப் பின்பற்றவேண்டும்.

வேளாண் பணிகள் பாதிக்காமல், விளைபொருட்களை தடையின்றி சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று காணொலியில் பிரதமருடன் பேசிய முதல்வர், தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்தார். கரோனா தடுப்புக்கான எந்த நடவடிக்கை என்றாலும், 12 மண்டல குழுக்களுடன் ஆலோசித்து அறிவுரைகளை வழங்குகிறார். இதனால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

காய்கறி, உணவுப் பொருட்கள் விலைவாசி உயர்வதாக எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் பொய் குற்றம் சாட்டுகிறார்.

2019 - 2020 கொள்முதல் பருவத்தில் ஏப்., 10 வரை டெல்டா மாவட்டத்தில் 1508 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து, 15,78,934 மெட்ரிக் டன், பிற மாவட்டங் களில் 532 கொள் முதல்நிலையங்கள் மூலம் 4,08,599 மெ.டன், கூட்டுறவு, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு இணையம் மூலம் 21 கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 1,03,578 மெ.டன் என, 2061 கொள்முதல் நிலையங்கள் மூலம் 20,91,112 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் 3,55,343 விவசாயிகளுக்கு ரூ.3954.33 கோடி ஊக்கத்தொகையை மாநில அரசு வழங்கியுள்ளது. கடந்தாண்டைவிட இவ்வாண்டு தமிழகத்தில் அதிக விளைச்சல் காரணமாக 21 லட்சம் மெ.டன் நெல் கொள் முதல் செய்து, மேலும், 7 லட்சம் மெ.டன் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்தில் 28 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச சாதனை. திருவாரூர் பகுதியில் முதல்வர் நடவு பணியை தொடங்கி நேரம், இந்த நெருக்கடியிலும் உணவுப் பொருள் உற்பத்தில் இச்சாதனையை பெற்றுள்ளோம். 40, 765 எக் டோர் நெல் சாகுபடியில் 3,08,651 எக்டேர் அறுவடைக்கு தயாராக உள்ளது.

காய்கறி, பழம், சிறுதானிய சாகுபடியிலும் சாதித்துள்ளோம். தமிழகத்தில் 9,915 நடமாடும் வானங்களில் இது வரை 5,478 மெ.டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விநியோகித்துள் ளோம்.

காய்கறி, உணவுப்பொருட்கள் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. புள்ளி விவரங்கள் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். நம்பிக்கையின்மையால் மக்களை சந்திக்க முடியாமல் அவரது கட்சியினருடன் பேசி, செய்திகளை முழுமையாகத் தெரியாமல் பரப்புகிறார்.

புதிய விடியலை நோக்கிய முதல்வரின் பயணத்தை மு.க.ஸ்டாலின் சீர்குலைக்க நினைக்கிறார். தீ்ர்க்க தரிசியாக செயல்படும் முதல்வரின் நடவடிக்கைகளுக்கு இடையில் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் உளறுகிறார்.

அவர் ஏமாற்றுகிறார் என்பது மக்களுக் கே தெரியும். முதல்வரின் சிந்தனை, நடவடிக்கைகளை புத்தகமாக வெளியிடலாம். அரசியல் முகவரியை இழந்து விடுவோம் என்ற காழ்புணர்ச்சியில் கரோனா நடவடிக்கைகளுக்கு எதிராக முக. ஸ்டாலின் செயல்படுகிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SCROLL FOR NEXT