எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களும் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றப்பட்டன.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் விரைவு நீதிமன்றங்கள், குற்றவியல் தலைமை நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வந்தன. இந்த வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இதையடுத்து, நீதிமன்ற வளாகம் ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. அதற்காக நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து நீதிமன்றங்களையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள மூர் மார்க்கெட் வளாகத்தில் (அல்லிகுளம்) மாற்றும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்தது.
நேற்று மதியம் அனைத்து நீதிமன்றங்களும் மாற்றப்படும் பணிகள் முடிந்தன. நேற்று முதல் மூர் மார்க்கெட் வளாகத்தில் நீதிமன்றங்கள் செயல்படத் தொடங்கின.