பிற அரசுத்துறையினர் மூலம் ஏழைகளுக்கு அரிசி விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதால், மீண்டும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் அரிசி தர புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு 3 மாத ஊதியத்தையும் தர உள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 507 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 800 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இக்கடைகள் பல மாதங்களாகச் செயல்படவில்லை. அத்துடன் ஊழியர்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளாக ஊதியமும் தரவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு அமலாகி ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 9,425 மெட்ரிக் டன் , அரிசி அனுப்பியது. கடந்த 12-ம் தேதி முதல் ரேஷன் ஊழியர்கள் அல்லாமல் பொதுப்பணித்துறை மற்றும் அரசு ஊழியர்கள் மூலம் அரிசி தரும் பணி புதுச்சேரியில் தொடங்கியது. அது இன்னும் நிறைவடையவில்லை.
அதேநேரத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மூன்று மாதங்களுக்கு மட்டும்தான் அரிசி தரப்படும். அதற்குப் பின் வங்கிக் கணக்கில் பணம்தான்" என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அரிசி தரும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. அதையடுத்து, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி தரும் பணி தொடங்க உள்ளது. அது பழைய முறைப்படி மீண்டும் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் அரிசி தர புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் அரிசி தராமல் பிற துறை ஊழியர்கள் மூலம் அரிசி தரப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசி தர உள்ளோம். அதை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் தர உள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தைத் தந்து, அவர்கள் மூலம் அரிசி தர அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.