போலியோவால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைக் குடும்பத்துக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்பட்டது.
வேதாரண்யம் அருகே துளசியாபட்டினம் பகுதியில் வசிக்கும் துரைராஜ் - ஜெயா தம்பதியர் போலியோவால் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த கரோனா பொதுமுடக்க சமயத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் ஒரு வாரம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
துரைராஜ் - ஜெயா தம்பதியின் மகன்களான ஜெயராஜ் (32), ஆனந்தராஜ் (31), வெங்கடேஷ் (28) ஆகிய மூவருமே போலியோவால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். போலியோ தாக்கம் மட்டுமல்லாது இந்த மூன்று பிள்ளைகளுமே மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும் வேதனைக்குரிய விஷயம். இதில் இன்னும் வேதனை என்னவெனில், இவர்களின் தந்தை துரைராஜும் தற்போது ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இப்படி ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயுள்ள இந்தக் குடும்பத்தினர் தற்போது அரசு அறிவித்துள்ள பொதுமுடக்கத்தால் பிழைக்க எந்த வழியும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கும்கூட வழியில்லாமல் தவித்து வந்தனர். இந்தக் குடும்பத்தின் பரிதாப நிலையை அறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார்கள்.
இதனிடையே வேதாரண்யம் ரஜினி மக்கள் மன்றம் மூலம் துரைராஜ் குடும்பத்தின் பரிதாப நிலையை அறிந்த தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் ஸ்டாலின், இவர்களுக்கு உதவ முன்வந்தார். இதையடுத்து அவர் அனுப்பி வைத்த ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா நேற்று மாலை து துளசியாபட்டினத்துக்கு நேரில் சென்று துரைராஜிடம் வழங்கினார்.
அப்போது நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜேஸ்வரன், வேதாரண்யம் நகரச் செயலர் ராஜா உள்ளிட்ட ரஜினி மன்றத்தினர் பலரும் உடனிருந்தனர்.