அரியலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தினரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்த இவர், கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு லாரி மூலம் தனது ஊருக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் மற்றும் சளி ஆகியவை சேகரிக்கப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்குக் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவர் நேற்று (ஏப்.29) திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் சேகரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே, அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் திருச்சியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளர்.