தமிழகம்

அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்: திருப்பூர் சாலைகளில் வாகன நெரிசல்

செய்திப்பிரிவு

சேலத்தில் 4 நாட்கள் அமலில் இருந்த முழு ஊரடங்கு முடிந்து, நிபந்தனை களுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களை வாங்க சமூக இடைவெளியின்றி பொது இடங்களில் மக்கள் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இதனால், கடந்த 4 நாட்களாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

இந்நிலையில், முழு ஊரடங்கு நேற்று விலக்கப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கான அனுமதியுடன் கூடிய ஊரடங்கு நேற்று நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க நேற்று அதிகாலையிலேயே கூட்டம் கூட்டமாக வீதிகளில் மக்கள் சுற்றினர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் சாலை களில் வலம் வந்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக் காமல், கூட்டமாக கடைகளில் பொதுமக்கள் திரண்டு நின்று, பொருட்களை வாங்கிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியில் நேற்று முன்தினம் இரவுடன் முழு ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்ததையடுத்து நேற்று காலை முதலே மாநகரப் பகுதிகளில் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏராளமானோர் வெளியே வந்ததால் பிரதான சாலைகளில் வாகனப் போக்குவரத்துஅதிகமாக இருந்தது. குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் குவிந்தன.

மாநகரம் முழுவதும் விதிகளைப் பின்பற்றாமல், வெளியில் சுற்றித் திரிந்ததாக பகல் வரை 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டடு, 20 கார்கள், 120 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT