கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் சாலைகளில் தங்கி இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த தனிக் குழு அமைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமல் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வீடு இல்லாமல், ஆதரவின்றி சாலைகளில், பிளாட்பாரத்தில் வசித்து வரும் பெரும்பாலானோர் இந்தத் தொற்றின் விளைவுகள் குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.
இவர்கள் மூலமாக கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், சாலைகளில் வசிப்பவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்ய தனிக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் , தமிழகத்தில் கரோனா தொற்றைக் கண்டறிய 41 அரசு மற்றும் தனியார் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதால் இதுவரை 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகரித்த "BSL-3 VRDL Lab" எனும் நடமாடும் பரிசோதனை மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு மையமும் நாள் ஒன்றிற்கு 1000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முடியும்.
அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை செய்ய 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் நிலையில், கட்டணத்தை 500 ரூபாயாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.