தமிழகம்

ராமேசுவரத்தில் திடீர் சூறாவளிக் காற்று: 25 விசைப் படகுகள் சேதம்

செய்திப்பிரிவு

ராமேசுவரத்தில் அதிகாலையில் வீசிய சூறாவளிக் காற்றினால் கடலில் நிறுத்தி வைத்திருந்த விசைப் படகுகள் சிக்கி சேதமடைந்தன.

தமிழகத்தில் தற்போது விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 தொடங்கி ஜீன் 14 வரையிலும் அமலில் உள்ளது.

முன்னதாக கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரையிலும் அனைத்து படகுகளும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது ஊரடங்கு மே 3 வரையிலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் இயந்திரம் பொறுத்தப்பட்ட நாட்டுப்படகுகள் மட்டும் சுழற்சி முறையில் சமூக விலகலை கடைபிடித்து மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதியில் தூறல் மழையுடன் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.

இந்த சூறைக் காற்றினால் ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 25 படகுகள் தரைதட்டி சேதடைந்தன.

சூறைவளிக் காற்று நின்ற பின்னர் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக தனித்தனியாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேதமடைந்த படகுகளை சீரமைக்க தலா ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சூறைக்காற்றினால் ராமேசுவரம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதிகளில் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து ராமேசுவரம் தீவு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் மின்வாரியத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT