"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் மகாகவியின் சொல்லுக்கேற்ப, தமிழகம் முழுவதும்
25 நகரங்களில் பசியிலிருப்போர்க்கு நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவளிக்க “ஏழை எளியோருக்கு உணவு” என்ற சிறு முயற்சியை தொடங்குவதில் மன நிறைவு அடைகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் காணொலியில் பேசியுள்ளார்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. இதில் திமுகவின் அனைத்து அணியினரும் ஒருமுகப்படுத்தப்பட்டு இயங்குகின்றனர்.
இதன் ஒருபடியாக ஏழை மக்களுக்கு உணவளிக்க 25 முக்கிய நகரங்களில் சமையற்கூடங்கள் நிறுவி உணவு தயாரித்து ஏழை மக்களுக்கு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபற்றி திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் காணொலியில் பேசியுள்ள விவரம்:
“வணக்கம். கரோனா என்ற கொடிய நோய்த் தொற்றுக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 'தனித்திருப்போம்! விழித்திருப்போம்!' என்ற அடிப்படையில், பொதுமக்கள் எல்லோரும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். இப்படித் தனிமைப்படுத்தி, தனிமனித இடைவெளியோடு இருந்தால்தான், இந்த வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
அதே சமயத்தில், இது பலரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கினேன்; ஒரு வாரத்திலேயே ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. உதவி கேட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை வழங்கிக் கொண்டு வருகிறோம். இது ஒருபுறம் நடக்கிறது.
இதில் இன்னொரு தரப்பு மனிதர்களையும் கவனித்தாக வேண்டும். அவர்கள், உணவுக்கே வழியில்லாத - வீடுகள் இல்லாத - வாழ்விடம் இல்லாத மக்கள் - வெளிமாநிலத் தொழிலாளர்கள் - தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் - வீடற்றவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிகமான துயரத்தில் இருக்கிறார்கள்.
நான் முன்பு அறிவித்த 'ஹெல்ப்லைன் எண்ணுக்கு' வந்த அழைப்புகள் மூலம் எனக்கு வந்த செய்திகளில் என்னுடைய இதயத்தை நொறுக்கிய செய்திகள் எதுவென்றால், இவர்கள் பேசியதுதான். "எங்களுக்கு உணவுப் பொருட்கள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் சமைப்பதற்கு எங்களுக்கு இடம் கிடையாது" என்று அவர்கள் சொன்னார்கள்.
பொருள் கொடுத்தால் சமைத்துக்கொள்வோம் என்று கேட்கும் மக்கள் ஒருபக்கம்; பொருள் கொடுத்தாலும் சமைக்க இடமில்லை என்று சொல்லும் மக்கள் இன்னொரு பக்கம். அதனால் கரோனாவை எதிர்த்துப் பசியால் போராடுகிறார்கள். பசியோடு உள்ள குழந்தைக்கும், குடும்பத்துக்கும் உணவைத் தரமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
"தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்" என்று மகாகவி பாரதி பாடியிருப்பார். தனியொரு மனிதனும் பசியால் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் 'ஏழைகளுக்கு உணவளிப்போம்' என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். ஏழைகளுக்கு உணவு அளிப்போம் என்ற திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு அளிக்கிறோம். பட்டினி இல்லா சூழ்நிலையை ஓரளவுக்கு உருவாக்குவோம். இதற்காக 25 முக்கிய நகரங்களில் சமையற் கூடங்களை உருவாக்கி, உணவு வழங்கப் போகிறோம்.
பேரிடர் காலத்தில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம். பேரிடரில் இருந்து மீளப் பசியில்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம், ஒன்றிணைவோம்! உணவளிப்போம்! உதவிகள் செய்வோம்”.
இவ்வாறு ஸ்டாலின் காணொலியில் பேசியுள்ளார்.