கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம். 
தமிழகம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்க முடிவு; தமிழகத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள மிகப்பெரிய துரோகம்: கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகளின் போராட்டங்களும், உச்ச நீதிமன்ற உத்தரவும் அளித்த நிர்பந்தத்தால் மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

அப்போதும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தைத்தான் அமைத்தது. இதன் மூலம் அதனுடைய சுயேச்சை தன்மை பாதிப்புக்கு உள்ளானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தனியாக முழுநேரத் தலைவர் நியமிக்கப்படாமல் அதிகாரமற்ற ஆணையமாக இருந்தாலும், காவிரி நீர் பங்கீட்டில் தனது உரிமையை தமிழகம் ஓரளவுக்குப் பெற முடிந்தது.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் தாக்குதலால் நாடே வரலாறு காணாத நெருக்கடியில் இருக்கும்போது காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட நதிநீர் ஆணையங்கள் அனைத்தையும் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. கர்நாடக மாநிலத்துக்குச் சாதகமான ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தது முதல் காவிரி நீர் உரிமை உள்பட தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தையும் பறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது தமிழ்நாட்டுக்கு மோடி அரசு இழைத்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.

தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்க வைக்கவும் மத்திய பாஜக அரசின் தயவு தேவை என்பதால் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளை அதிமுக அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது. கடும் எதிர்ப்பு எழுந்தால் மக்களை ஏமாற்ற பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்கிறார்.

காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை என்பதால் இதில் அலட்சியம் காட்டாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிடுமாறு மத்திய அரசை முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சாதகமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கும் முடிவை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்.

இல்லையெனில், ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களமாக மாறும். பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகளைத் திரட்டி மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என, கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT