தமிழகம்

கரோனா பரவலால் வழக்கமான சிகிச்சைக்கு கூட வர அச்சம்: அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதம் புற நோயாளிகள் வருகை குறைவு 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கரோனா பரவல் அச்சத்தால் அரசு மருத்துவமனைகளில் 80 சதவீதம் புறநோயாளிகள் வருகை குறைந்தது.

அத்தியாவசிய அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே சொற்ப நோயாளிகள் வந்து செல்வதால் இதுவரை நோயாளிகள் கூட்டம் அலைமோதிய மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் 25 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 45 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா அரசு மருத்துவமனைகள் உள்ளன.

இதுதவிர 1700-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் நடக்கும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆண்டிற்கு 1 கோடியே 30 லட்சம் புற நோயாளிகளும், 60 லட்சம் உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருவார்கள்.

இதில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் 26 லட்சம் வெளி நோயாளிகளும், 9 லட்சம் உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருவார்கள்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 28 லட்சம் வெளி நோயாளிகளும், 10 லட்சத்து 50 ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வருவார்கள்.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு தமிழகத்தில் சராசரியாக 6 கோடியே 35 லட்சத்து 81 ஆயிரத்து 800 வெளி நோயாளிகளும், 68 லட்சத்து 21 ஆயிரத்து 300 வெளி நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ பரவல் அச்சத்தாலும், அவசர சிகிச்சை தவிர நாள் பட்ட நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் நோயாளிகள் வருகை 80 சதவீதம் குறைந்துள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ‘கரோனா’ நோயாளிகளுக்காக பிரத்தியேக வார்டுகள் உருவாக்கி அங்குநோயாளிகள் சிகிச்சை பெறுவதால் வழக்கமான சிகிச்சைகளுக்கு கூட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வர தயங்கி வீடுகளிலே கைவைத்தியம் பார்த்து சமாளிப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல், காய்ச்சல், இருமல், சளிக்கு போன்ற தொந்தரவுக்கு நோயாளிகள் வந்தால் ‘கரோனா’ வார்டுகளுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற தவறான புரிததால் அவர்கள் அச்சமடைந்து அரசு மருத்துவமனைகள் பக்கமே வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

அத்தியாவசிய அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே சொற்ப நோயாளிகள் வந்து செல்வதால் இதுவரை நோயாளிகள் கூட்டம் அலைமோதிய மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள், மருந்தகங்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ சங்கு மணி கூறுகையில், ‘‘இன்று(நேற்று) 1600 உள் நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு வந்துள்ளனர். ‘கரோனா’ நோயாளிகள் தவிர உள் நோயாளிகள் 900 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். மகப்பேறு அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல் நடக்கிறது. தொலைதூரத்தில் இருந்து

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வருவோர் அவரவர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்துமாத்திரைகள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால், வெளி நோயாளிகள் வருகை குறைவாக உள்ளது, ’’ என்றார்.

ஒய்வு பெற்ற முன்னாள் மதுரை அரசு மருத்துவமனை டீனும், தற்போதைய மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு அதிகாரியுமான மருதுபாண்டியன் கூறுகையில், ‘‘பொதுவாக சாதாரண சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டு வலி,

மூச்சுத்திணறல் போன்றவற்றுக்கு சிகிச்சைக்கு வருவோர் தற்போது வருவதில்லை. அவர்கள் அந்தந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொள்கின்றனர்.

சிலர், மருத்துவமனைக்கு செல்லாமலே வீடுகளிலே ஏதாவது கை வைத்தியம் பார்த்து சமாளித்துக் கொள்கின்றனர். விபத்துகள் குறைந்ததால் எலும்பு முறிவு, தலைக்காயம் சிகிச்சை நோயாளிகள் பெருமளவு குறைந்தது. மக்கள் காட்டு வேலைக்கு செல்லாததால் பாம்பு கடி நோயாளிகள் குறைந்துள்ளனர்.

மன நல மருத்துவ சிகிச்சைக்காக வருவோர், மாத்திரைகள் தீர்ந்து போனால் மருத்துவரை வந்து பார்த்து கூடுதல் நாட்களுக்கு மாத்திரைகள் வாங்கிச் செல்கின்றனர்.

தைராய்டு கட்டி, குடல் அலர்ச்சி, புற்றுநோய் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மருத்துவர்களே தற்காலிகமாக தள்ளி வைத்து அதற்கான வலி நிவாரண மருந்துகள் வழங்கிவிடுகின்றனர். நோய் கடுமையாகி வலி தாங்க முடியாதவர்களையே தற்போது அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்.

கிராமங்களில் இருந்து வரும்நோயாளிகள் வராததாலும், நாள்பட்ட நோயாளிகள் தொடர்ந்து வராததாலும் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை குறைந்துள்ளது, ’’ என்றார்.

SCROLL FOR NEXT