மதுரை மாநகராட்சியில் கரோனா பரவலைத் தடுக்க இதுவரை 21 குடியிருப்புகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் நேற்று 27-ம் தேதி நிலவரம் அடிப்படையில் 46 பேருக்கு ‘கரோனா’ தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில், 10 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று ஏற்பட்ட 21 குடியிருப்புகளை மாநகராட்சி நிர்வாகம் ‘சீல்’ வைத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாதப்படி போலீஸாரை வைத்தும், ட்ரோன் காமிரா மூலம் கண்காணிக்கிறது.
இந்தப் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிகுறி இருக்கும் நபர்களுக்கும், நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களுக்கும் ‘கரோனா’ பரிசோதனை செய்து வருகின்றனர்.
மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘தடை செய்யப்பட்ட பகுதிகளில் மக்கள் சுகாதாரத்துறையினரின் ‘கரோனா’ அறிகுறி பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் அவர்களை விரட்டிவிடுகின்றனர்.
இன்னமும் குடியிருப்புகளில் இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டம், கூட்டமாக நின்று பேசுகின்றனர். சமூக இடைவெளியை மதிக்காமல் நடமாடுகின்றனர்.
உலகத்தை முடக்கி வைத்துள்ள ‘கரோனா’வின் கோர முகம், மக்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதிகப்பட்சமாக மேற்கு மண்டலத்தில் 22 பேர் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக வடக்கு மண்டலத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு மண்டலத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மண்டலத்தில் தற்போது வரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. இந்த மண்டலம் குடியிருப்பு பகுதிகள் மட்டுமே ‘கரோனா’ தொற்று இல்லாமல் மக்கள் உள்ளனர்.
அதனால், இந்த பகுதிகளை மேலும் பாதுகாக்க மற்றப்பகுதிகளில் இருந்து இந்த மண்டலப்பகுதிகளுக்கு வரும் சாலைகள், தெருக்களில் போலீஸார் தற்காலிக செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்கின்றனர்.
மீறி வருவோர் வாகனங்களை பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், ’’ என்றார்.