காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகச் செயல்பட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் 1924 ஆம் ஆண்டு செய்து கொண்ட காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிராகரித்து கர்நாடக அரசு தொடர்ந்து அத்துமீறிச் செயல்படுவதால், தமிழ்நாடு காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாக்க தமிழகம் நீண்ட காலமாகப் போராடி வருகிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட காவிரி நீர் நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இதனைச் செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.
இது தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் அளவை 177.5 டிஎம்சியாக குறைத்து நிர்ணயித்து, மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் பிறகும் நீண்ட போராட்டத்தில் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாகவே மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைத்தது.
இதன் செயல்பாடு அரசியல் சட்ட அடிப்படையில் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவு அலுவலகமாக இணைத்து இருப்பது தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையை நிரந்தரமாக பறித்துக்கொள்ளும் பாஜக மத்திய அரசின் துரோகச் செயலாகும்.
தமிழ்நாடு மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக மத்திய அரசின் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என, இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.