பொம்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் வரலட்சுமி. 
தமிழகம்

ஏற்றுமதியில்லாமல் மண்ணாக மாறுகிறதோ? தவிக்கும் மண்பாண்டக் கலைஞர்கள்

செ.ஞானபிரகாஷ்

ஊரடங்கால் தற்போது தயாரான மண்பாண்டங்கள், பொம்மைகளை ஏற்றுமதி செய்ய இயலாமல் வீணாகி மண்ணாகி விடுமோ என்ற தவிப்பில் மண்பாண்டக் கலைஞர்கள் தவிப்பில் உள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு விதித்துள்ள ஊரடங்கால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் உழைத்தால்தான் உணவு என்ற சூழலில் ஏராளமானோர் உள்ளனர்.

புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்டக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொம்மைப் பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பத்மஸ்ரீ விருதாளர் முனுசாமி கூறுகையில், "கிராமப்புறமான வில்லியனூர், கணுவாப்பேட்டை, பிள்ளையார்குப்பம், முருங்கப்பாக்கம், வம்பு பட்டு உள்பட பல பகுதிகளில் உள்ள மண்பாண்டக் கலைஞர்கள் தயாரித்துள்ள பொம்மைகள் களிமண்ணால் ஆனவை.

அத்துடன் வானல் ஹாட் பாக்ஸ், சாமி சிலைகள், பானைகள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும். தற்போது அவை வீணாகிவிடுமோ என்ற அச்சமே அதிகரித்துள்ளது. களிமண்ணால் செய்த பொம்மைகள் வீணாகிவிடுமோ என்ற அச்சமுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு நிவாரணம் தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பொம்மைக் கலைஞர்கள் பலரும் ஆண்டு முழுவதும் வேலை செய்து பழக்கப்பட்டவர்கள். தற்போதைய ஊரடங்கு காரணமாக ஒன்றரை மாதங்களாய் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

பொம்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் வரலட்சுமி கூறுகையில், "எங்களால் பொம்மை தயாரிக்கும் வேலை செய்துவிட்டு வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. தினந்தோறும் வேலை செய்துவரும் இடத்துக்குச் சென்று அங்குள்ள பொம்மைகள் செய்யும் அச்சுகள், சாமி செய்யும் அச்சுகள், பானை செய்யும் இயந்திரங்கள் ஆகியவை வீணாகி விடாமல் இருக்க தினந்தோறும் சென்று சுத்தம் செய்கிறோம்" என்கிறார் ஏக்கத்துடன்.

எப்போது விலகும் கரோனா காலம்? என்று நிறைவடையும் ஊரடங்கு? என்ற ஏக்கம் பலரின் கண்களில் தெரிகிறது.

SCROLL FOR NEXT