கையில் குடையுடன் தனி மனித விலகலைக் கடைப்பிடிக்கும் திருப்பூர் தன்னார்வலர்கள். 
தமிழகம்

கையில் குடை எடு; கரோனாவைத் தடு: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அழைப்பு

இரா.கார்த்திகேயன்

அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்லும், திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கையில் ஒரு குடை எடுத்துச் சென்றால், தனி மனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டு கரோனா தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் காணொலி பதிவிட்டு அவர் கூறியிருப்பதாவது:

"முழுமையான ஊரடங்கு முடிந்த நிலையில், காய்கறிச் சந்தை உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே வரும் பொதுமக்கள், ஒரு குடையுடன் வெளியே வர வேண்டும். இதனை மற்ற மாநிலங்கள் தற்போது கையில் எடுத்து வெற்றிகரமாக தனி மனித விலகலைக் கடைப்பிடித்துள்ளன. நாமும் இந்த நல்ல விஷயத்தைக் கையில் எடுப்போம்.

அதாவது, ஒருவர் குடையை எடுத்து வெளியே வரும்போது, எதிரில் இருப்பவரும் குடையுடன் இருப்பதால் இயல்பாகவே தனி மனித விலகல் உண்டாகிறது. கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள, தற்போதைய தேவை தனி மனித விலகல்தான். இதன் மூலம் தனிமனித விலகலும் சாத்தியமாகிறது.

ஆகவே, பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்புத் தந்தாலும், இதுபோன்ற விஷயங்களை நாம் முன்மாதிரியாக முன்னெடுக்க வேண்டிய நிலை உள்ளது. குடையைக் கையில் எடுத்து, நோயில் இருந்து நம்மைக் காப்போம்".

இவ்வாறு திருப்பூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் பதிவுடன் திருப்பூர் தன்னார்வலர்கள் கையில் குடையுடன், சமூக விலகலைக் கடைப்பிடித்த புகைப்படத்தையும் ஆட்சியர் பதிவிட்டிருப்பது, பல்வேறு தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT