ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிமணி மகன் தலைவெட்டி சந்துரு (எ) சந்திர மோகன்(38). இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு என பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் 2018-ல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறை சென்று வந்தவர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
நேற்று காலை தனது 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் திருவானைக்காவல் செல்லும் மேம்பாலத் தில் சந்திரமோகன் சென்றபோது எதிரே வந்த கார், இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சந்திரமோகனின் குழந்தை கீழே விழுந்தது. காரில் இருந்த மூவரில் ஒருவர் அக்குழந்தையை தூக்கிச் சென்று சில அடி தூரத்தில் விட்டுள்ளார். அப்போது, காரில் இருந்து இறங்கிய மற்ற 2 பேர் சந்திரமோகனை அரிவாளால் வெட்டிகொன்றதுடன், தலையைத் துண்டித்தனர். பின்னர் அந்த தலையுடன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குச் சென்று 3 பேரும் சரணடைந்தனர். அவர்கள், ஸ்ரீரங்கம் ரயில்வே காலனி மாரிமுத்து மகன் சரவணன்(35), அவரது தம்பி சுரேஷ்(30), உறவினர் செல்வக்குமார்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது.