பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் மதுவிலக்கு போலீஸார் நேற்று ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ‘வழக்கறிஞர்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரை மறித்து சோதனை செய்தபோது, அதில் சாராயம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த மங்களமேடு ஆறுமுகம் மகன் ரவிராஜா(38), செங்குணம் சுப்பிரமணியன் மகன் முத்துராஜ்(32) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் சாராய வியாபாரிகள் என்பதும், அவர்களை செல்போனில் தொடர்பு கொள்பவர்கள், ‘கூகுள் பே’ மூலம் பணத்தை செலுத்தியவுடன், உரியவர்களின் இருப்பிடத்துக்கே சென்று சாராயத்தை டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து, காரையும், அதில் இருந்த 6 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.