தமிழகம்

கடும் எதிர்ப்பு; பள்ளி வளாகத்தில் தற்காலிக சிறை அமைக்கும் முடிவு நிறுத்தம்: புதுச்சேரி முதல்வர் பேட்டி 

செ.ஞானபிரகாஷ்

கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பள்ளி வளாகத்தில் தற்காலிக சிறை அமைக்கும் முடிவு நிறுத்தப்படுகிறது. வேறு இடத்தைத் தேர்வு செய்ய உள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஏனாமுக்கு நடந்தே வந்தோரை ஊருக்குள் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''புதுச்சேரியில் ஓரளவு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. சமுக இடைவெளியை 90 சதவீதத்தினர் கடைப்பிடிக்கிறார்கள்.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் ரெட் ஸ்பாட் பகுதிகளாக உள்ளன. அதே நேரத்தில் புதுச்சேரியைக் கட்டுப்பாடான பகுதியாகியுள்ளோம்.

ஆந்திரத்தில் வேலைக்காகச் சென்றோர் ஏனாம் திரும்பி வந்தோர் எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மத்திய அரசு உத்தரவுப்படி செயல்படுகிறோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி உள்ளே நுழையக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். கனமழையிலும், வெயிலிலும் படுத்து இருந்துள்ளனர். இது கொடுமையான செயல்.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தபடி, மத்திய கேபினட் செயலரிடம் தனிமைப்படுத்தி அதன் பிறகு அனுமதிக்கலாம் என்று தெரிவித்தேன். தற்போது பேரிடர் கூட்டத்தில் முடிவு செய்து ஏனாம் வர உத்தரவிட்டுள்ளேன்.

மாஹே பகுதியில் இருந்து சவுதி அரேபியா, துபாய் சென்றோர் திரும்பி வர விரும்புகிறார்கள். அதற்காக குழு அமைத்துள்ளோம். அதில் பெயர் பதிவு செய்தால் பிரதமருக்குக் கடிதம் எழுதி திரும்பி வர நடவடிக்கை எடுப்போம். பல மாநிலங்களில் படிக்கச் சென்ற குழந்தைகள் திரும்பி வரக் கோருகின்றனர். அது தொடர்பாக மே 3-ம் தேதிக்குப் பிறகு நடவடிக்கை எடுப்போம்.

புதிய வழக்குகளில் கைதாகிறவர்களை சிறைக்கு அனுப்பாமல் தனி இடத்தில் தனிமைப்படுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கதிர்காமத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக சிறை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்துள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். பேரிடர் அமைப்புக்கூட்டத்தில் பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில் சிறை வராது என முடிவு எடுத்துள்ளோம். வேறு இடத்தைத் தேர்வு செய்ய உள்ளோம். பழைய உத்தரவை நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளோம்''.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT