தமிழகத்திலே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையான மதுரை சென்ரல் மார்க்கெட் சந்தை மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சந்தை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்படுகிறது.
தென் தமிழகத்தில் மதுரை சென்ட்ரல் மார்கெட் மிக முக்கியமானது.
இந்த சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
அதுபோல், தென் மாவட்ட விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து இந்த சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ‘கரோனா’ மதுரையில் தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் சென்ட்ரல் மார்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவிட்டார். வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் சந்தையை செயல்பட ஆட்சியர் அனுமதிக்கவில்லை.
இதனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மாட்டுத்தாவணி சந்தை மூலமாக வரக்கூடிய காய்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்படத்தொடங்கியது.
இந்நிலையில், வியாபாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் சென்ட்ரல் மார்கெட்டை தற்காலிகமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து காய்கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘ஆட்சியர் சமூக இடைவெளியை கடைபிடிக்க நிபந்தனை விதித்து சந்தை செயல்பட அனுமதி வழங்கியுள்ளார். ‘கரோனா’ நோய் முற்றிலும் குறையும் வரை இந்த சந்தையே இனி தொடரும், ’’ என்றார்.