3டி தொழில்நுட்பத்தில் 1 லட்சம் முகக்கவசங்களை கோவையில் உள்ள தனியார் கல்லூரி தயாரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்புப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
கோவை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், 3டி தொழில்நுட்பத்தில் முகக்கவசங்கள் தயாரித்து வருகின்றனர். இதுவரை 1 லட்சம் முகக்கவசங்களை இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்துள்ளனர்.
இது தொடர்பாக, கல்லூரித் தலைவர் மதன் ஏ.செந்தில் கூறுகையில், "மத்திய அரசின் நிதி ஆயோக் திட்டத்தின் கீழ், கல்லூரியில் 'அடல் இன்குபேஷன் சென்டர்' நிறுவியுள்ளோம். அரசு அனுமதியுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என ஒரு சிறு குழுவை அமைத்து இம்மையத்தில் முகக்கவசங்களைத் தயாரித்து வருகிறோம்.
3டி பிரிண்டர் உதவியுடன் இக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்புப் பணியில் களமாடிவரும் மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முகக்கவசங்கள் இன்றியமையாததாகிவிட்டன.
இதேபோல் மூக்கு, வாய் வழியாக வழியும் சளி, உமிழ்நீர் போன்றவை பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. நோய்த் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதற்குக் காரணமாகிறது. எனவே மூக்கு, வாய்ப் பகுதியை நன்றாக மூடிப் பாதுகாக்கும் கவசங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி உற்பத்தி செய்து வருகிறோம்.
இதுவரை சுமார் 1 லட்சம் முகக்கவசங்களைத் தயாரித்து, கோவை மாநகராட்சி, அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு இலவசமாகவும், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் அமைப்புகளுக்கு மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளோம். தேவையின் அடிப்படையில் தொடர்ந்து முகக் கவசங்களைத் தயாரித்து வருகிறோம்" என்றார்.
செயற்கை சுவாசக் கருவி
"கல்லூரியின் 'அடல் இன்குபேஷன் சென்டரில்' முகக் கவசங்கள் தயாரிப்புப் பணியுடன் சேர்த்து செயற்கை சுவாசக் கருவிகளையும் தயாரித்து வருகிறோம். 'புரோட்டா டைப்' என்ற முதல்கட்டப் பணிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தயாரிப்புப் பணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது ஊடரங்கு உத்தரவு காரணமாக செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர்களிடம் மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தையில் லட்சங்களில் விற்பனையாகும், இக்கருவிகளை இம்மையத்தில் தயாரிப்பதன் மூலம், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்குள் வாங்கி விட முடியும். பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வாங்கும் திறனும் அதிரிக்கும் என்பதால், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்" என்றார், கல்லூரி முதல்வர் கே.சிவக்குமார்.