நாகை மாவட்டம் சீர்காழியில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும் திருமுலைப்பால் உற்சவம் ஊரடங்கு காரணமாக இன்று பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்தது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதசுவாமி கோயிலில் குளக்கரையில் அழுது கொண்டிருந்த குழந்தை திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கியதாக ஐதீகம். இந்த நிகழ்வு ஆண்டுதோறும் திருமுலைப்பால் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமுலைப்பால் விழா இன்று மிக எளிமையாக நடைபெற்றது. வழக்கமாக கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும் திருமுலைப்பால் பிரம்மோற்சவம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஞானப்பால் வழங்கும் ஐதீக நிகழ்வு தடைப்படக் கூடாது என்பதால் பக்தர்கள் யாரும் இன்றி மிக எளிமையாக நடந்தது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் தேவாரப் பாடல் பதிகங்கள் பாடி, திருஞானசம்பந்தருக்கு, பொற்கிண்ணத்தில் உமையம்மை ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.