முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்: இதுபோன்ற நேரங்களில் பிரதமர் எப்போதும் வாய் திறந்து பேசுவதில்லையே ஏன்? - முத்தரசன் கேள்வி

செய்திப்பிரிவு

விரைவுப் பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன என்பது குறித்து, பிரதமர், முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்று பற்றிய விரைவுப் பரிசோதனைக் கருவிகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதை டெல்லி உயர் நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் எண்ணிக்கையில் 5 லட்சம் விரைவுப் பரிசோதனைக் கருவிகள் வாங்க சீன நிறுவனங்களுக்குக் கொடுத்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று அவசர அவசரமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இத்துடன் 'கதை' முடிந்தது, அடுத்த வேலையைப் பார்ப்போம் என பொது நியாயம் கூறி, ஊழல் 'பெருச்சாளிகளை' தப்பிக்க விட்டு விடலாமா?

மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் விரைவுப் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதை 'மிகத் தந்திரமாக' மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? இது தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு அரசுக்குத் தெரியுமா, தெரியாதா?

பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், சமூகப் பேரழிவை ஏற்படுத்தும் அசாதாரண காலத்தில் 'காசு', 'பணம்', 'துட்டு' என அலைந்து சுயநலக் கும்பலை சமூகத்திற்கு அடையாளம் காட்டத் தயங்குவது ஏன்? இதுபோன்ற நேர்வுகளில் பிரதமர் எப்போதும் 'வாய்' திறந்து பேசுவதில்லையே ஏன்?

விரைவுப் பரிசோதனைக் கருவிகள் வந்ததும் முதலில் சேலம் மாவட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என ஆர்வம் காட்டினார் முதல்வர். ஆனால், அந்தக் கருவிகளின் தரம் பற்றியும், அதன் கொள்முதலில் நடந்துள்ளது ஊழல் குறித்தும் அறியவில்லை என்பதை மக்கள் நம்ப வேண்டும்.

நாடு முழுவதும் முடக்கம் செய்து, நோய்ப் பெருந்தொற்று பரவலைத் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையினர் போதிய தடுப்பு சாதனங்கள் இல்லாது போராடிக் கொண்டிருக்கும் போது, கோடிக்கணக்கானோர் பட்டினிக்குத் தள்ளப்பட்டு உயிர் வாழ உணவுக்குக் கையேந்தி நிற்கும் நிலையில், கோவிட்-19 வைரஸ் நோய் பெருந்தொற்று பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா, இல்லையா?

விரைவுப் பரிசோதனைக் கருவிகள் தரம் இல்லாததால் அதன் கொள்முதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டதா? இல்லை டெல்லி உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது போல் அதீத விலை வைத்து, ஊழல் நடந்ததால் ரத்து செய்யப்பட்டதா? என்பதை நாட்டின் பிரதமரும், மாநில முதல்வரும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT