தமிழகம்

ராமநாதபுரத்துக்கு வெளியூர்களில் இருந்து அனுமதியின்றி வந்த 298 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: ஆட்சியர் தகவல்

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த 298 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், சத்து மாத்திரைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்டத்தில் இதுவரை 1,518 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 7 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து உரிய அனுமதியின்றி மாவட்டத்துக்குள் நுழைந்த 298 பேர் குறிப்பிட்ட இடங்களில்
தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களைச் சேர்ந்த 3,174 பேருக்கு அரசின் கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 2,702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதியை மீறி திறந்ததாக 225 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன், சுகாதார துணை இயக்குநர் ஆஜித் பிரபுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிஐஜி ஆய்வு:

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி சேதுநகரைச் சேர்ந்த அரசு செவிலியர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வசிக்கும் இடத்திலிருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்லாத வகையில் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஸ் குமார் மீனா நேற்று ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT