ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அவரது அலுவலகத் தில் பணியாற்றிய 2 பேரிடம் சென் னையில் நேற்று உண்மை கண்டறி யும் சோதனை நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 29.3.2012-ல் கொலை செய்யப்பட்டார். மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற் றம் ஏற்படாததால், 2012 ஜூன் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
எனவே, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். குற்றவாளி களைக் கண்டறிய சிபிசிஐடி போலீ ஸாருக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளை அதற்குள் கைது செய்துவிட சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமஜெயத்துக்கு நெருக்கமான 8 பேரை பட்டியலிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
இவர்களில் முதற்கட்டமாக ராமஜெயத்தின் அலுவலக பணியாளர் நந்தகுமார், உதவியாளர் கேபிள் மோகன், முல்லைக்குடி சண்முகம் ஆகிய 3 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகேட்டு திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண்-6-ல் சிபிசிஐடி போலீஸார் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் கேபிள் மோகன், நந்தகுமார் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து கேபிள் மோகன், நந்தகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார், சென்னைக்கு அழைத்துச் சென்று சாஸ்திரி பவன் வளாகத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இதுபற்றி சிபிசிஐடி போலீஸாரி டம் கேட்டதற்கு, “விசாரணையின் போது ஒவ்வொரு முறையும் வாக்குமூலத்தில் தெரிவித்த தகவல் களை மாறி மாறி கூறியதால் இவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நீதி மன்றத்தில் அனுமதி கேட்டோம். இதற்கு முல்லைக்குடி சண்முகம் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரி வித்தார். எனவே, அவரைத் தவிர்த்து மற்ற இருவரிடமும் சென்னை யில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. ராம ஜெயம் அலுவலகத்தில் பணிபுரிந்த வர்கள் என்பதால், இச்சோதனை யின்போது இவர்களிடம் இருந்து ஏதாவது துப்பு கிடைக்க வாய்ப் புள்ளது எனக் கருதுகிறோம். இவர்களைத் தொடர்ந்து மேலும் சிலரிடமும் இச்சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.
சிபிஐ நடத்திய சோதனை
உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கேபிள் மோகனை தொடர்புகொண்டு கேட்டபோது, “சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இன்று 5 மணி நேரத்துக்கு மேல் என்னிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். ஏற்கெனவே சில கேள்விகளை தயார் செய்து வைத்து, அதைக் கேட்டு என்னிடம் பதில் பெற்றுக்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளும் வந்திருந்தனர். நாளையும் (இன்றும்) என்னிடம் இச்சோதனை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நானும் ஒப்புக்கொண்டுள்ளேன். இதற்கு மேல் இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம்” எனக்கூறினார்.