தென்காசியில், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் உதவிகளை வழங்கினர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பேட்டையில் நகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது.
இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளின் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படுவதை ஆசிரியர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கு உதவி செய்ய தலைமை ஆசிரியர் மணிமாறன் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, விஜய நிர்மலா, லட்சுமணன், துரையம்மாள், சாமி, நர்மதா, சுபசெல்வி ஆகியோர் முடிவு செய்தனர்.
தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி மற்றும் 4 கிலோ காய்கறிகளை பைகளில் போட்டு மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு இன்று வழங்கினர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கடையநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி கலந்துகொண்டனர். தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவிகளின் குடும்பத்தின் மீதும் ஆசிரியர்கள் அக்கறை செலுத்தி உதவி செய்தது பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.