இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு கதிர்காம மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவை விரைவில் தற்காலிகச் சிறைகளாக மாற்றப்படுகின்றன. லாக் டவுன் விதிமீறலில் ஈடுபடுவோரை இந்த இடங்களில் அடைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கல்வி நிலையங்களும் அருகருகே உள்ளன. அங்குள்ள பெரிய ஹாலில் சிறு தடுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை தற்காலிகச் சிறைச்சாலைகளாக மாற்ற அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
காலாபேட்டையில் உள்ள சிறை லாக் டவுன் காரணமாக மூடப்பட்டுள்ளது. அங்கு 159 கைதிகள் உள்ளனர்.
“லாக் டவுன் அறிவிப்பு வந்தவுடனேயே விசாரணைக் கைதிகள் 89 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். லாக் டவுனை மீறுபவர்களுக்காக தற்காலிகச் சிறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பிற குற்றங்களில் சிக்குபவர்களையும் அடைக்க சிறை தற்போது இல்லாததால் கல்வி நிலையங்கள் சிறைகளாக்கப்படுகின்றன” என்றார் மூத்த அதிகாரி ஒருவர்.
இதுவரை புதுச்சேரியில் லாக் டவுன் மீறல்களுக்காக 2,826 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15,829 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார் மகாகவி பாரதியார். ஆனால் புதுச்சேரியில் பள்ளி, கல்வி நிலையங்கள் தற்காலிகச் சிறைகளாகியிருப்பது கரோனா காலத்தின் முரண்.