கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செவிலியர் பணி செய்யும் ரோபோ குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகத்தில் மாணவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சேலம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பொறியியல் படிக்கும் மாணவர்களால் செவிலியர்கள் பணிகளை செய்யும் V2 BUDDY என்ற புதிய அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கு காய்ச்சலின் அளவைக் கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்த ரோபோ செய்யும். அது மட்டுமின்றி சிகிச்சை பெறுபவரிடம் காணொலிக் காட்சி மூலம் நேரடியாக உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து கொள்ளவும், நோயாளிகள் இருக்கும் அறைக்குள் செல்லாமலேயே அவர்களுக்கு உணவும் விநியோகம் செய்ய முடியும்.
இந்த அதிநவீன செவிலியர் ரோபோ செல்போன் செயலி மூலம் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் அவசர உதவி மற்றும் ஆலோசனைக்கு செவிலியருடன் பேச வி2 பட்டீ கால் (V2 Buddy Call) வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய செவிலியர் ரோபோவின் செயல் விளக்கம் நேற்று (ஏப் 27) மாலை சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
இதுகுறித்து செவிலியர் ரோபோவைக் கண்டுபிடித்த மாணவர்கள் கூறும்போது, "மருத்துவர்கள் மற்றும் செவிலியர் குழு வழங்கிய ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளோம்.
காய்ச்சலின் அளவைக் கண்டறிவது, மருந்துகள் அளிப்பது, கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்யும் வகையிலும், உணவு விநியோகம் செய்யும் விதமாகவும் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளோம். ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோவினை இயக்கும் செயலி செவிலியரின் கையில் இருக்கும்.
இதன் மூலம் அவர்கள் நோயாளிகளிடம் உரையாட முடியும். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அறைகளுக்குள் செல்லாமலேயே பார்த்துக்கொள்ள முடியும்" என்றனர்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் கூறும்போது, "இந்தப் புதிய கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் பயனுள்ளதாக இருக்கும். இதன் செயல்பாட்டைச் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பார்வையிடுவார்கள். அதன் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படும் பட்சத்தில் அதை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்துவோம்" என்றார்.